கோவையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்ட நிலையில், இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் வாக்கு சேகரிக்கவுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் பகல் 12 மணி அளவில் கோவை செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்கிறார். தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள சித்ராவுத்தன்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிற்பகல் 3 மணிக்குச் செல்லவுள்ளார்.
அங்கு 5,000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை எனவும் ஆனந்த் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்லவும் திட்டமிட்டுள்ள நிலையில், அவர் பயணிக்கும் வழிநெடுக சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்து, கார்கள் நீலாம்பூர் வழியாக வந்து L&T பைபாஸ் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நீலாம்பூர், சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்லவும், அவிநாசி சாலை வழியாக வெளியேறும் வாகனங்கள் லட்சுமி மில்ஸ் பகுதியில் U-Turn செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக செல்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று, அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையை யொட்டி விமான நிலைய பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்பாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை. மேலும், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





