பேராசிரியர் அருணன் சி.பி.எம் கட்சிக்கு முரணாக கருத்து..!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏகனாபுரம் கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனச் சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக, “மாற்று இடம் தேர்வு செய்தால் திட்டம் மேலும் தாமதமாகும்; இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகும்” எனச் சி.பி.எம் மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்கள் வாழ்விடம், விளைநிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடப்படுகிறது என சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (26.08.2026) அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள் வரவேற்று முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ஐ.யூ.எம்.எல், பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க மட்டும் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டிற்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும், ஆனால், விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் அழியும் பரந்தூரில் அதை அமைப்பது தவறு என சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்ற தமிழக அரசின் முடிவை வரவேற்ற சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம், புதிய விமான நிலையம் வேண்டும், ஆனால் அது பொதுமக்களை, விவசாயிகளின் விளைநிலங்களை, நீர்நிலைகளை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும். மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிடாதது ஏன் என்று தி.மு.க-வை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், “பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.
விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.” பெ.சண்முகம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில், சி.பி.எம் மூத்த தலைவர் , பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும் த.வெ.க அரசின் முடிவு குறித்து கட்சியின் நிலைப்பாட்டு மாறாக கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பேராசிரியர் அருணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “த.வெ.க அரசு தி.மு.க-வை எதிர்க்கலாம். அது அவர்களின் அரசியல் உரிமை. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எதிர்க்க கூடாது.
விமான நிலையத்திற்கு மாற்று இடம் என்றால் மேலும் தாமதமாகும். அதற்கு ஒப்புதல் தர ஒன்றிய அரசு இழுத்தடித்தால் என்னாகும்? மெட்ரோ திட்டமும் போச்சு. குஷாலாக இருப்பது மோடி அரசே. இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டியது இல்லை அல்லவா?” என்று கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் அருணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சி.பி.எம்) மூத்த தலைவராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து குறித்து இவருடைய மாறுபட்ட கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




