நாகர்கோவில் விசாரணைக் கைதி உயிரிழப்பு… பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
கன்னியாகுமரி மாவட்டம், தென் தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன். இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த சூழலில் அந்தக் கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி தென் தாமரைக்குளம் காவலர்கள் அவரைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், 13ஆம் தேதி காலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் திடீரென உயிரிழந்தார். முன்னதாக சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரணமடைந்த சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சபரிவர்மனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
அதன் அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தலையில் 2 இடங்களிலும், பின்னங்கழுத்து மற்றும் பின்னந்தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் சுமார் 7 சென்டிமீட்டர் அளவில் காயம் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலது கையில் 6 இடங்களிலும், வலது மற்றும் இடது கால்களிலும் காயங்கள் உள்ளதாக உடற்கூராய்வில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியான சபரிவர்மனின் பாதிக்கப்பட்ட கையிலும் காயப்படுத்தி, சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி, சபரிவர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மறுபுறம், இந்த உயிரிழப்பு தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, 2-ஆவது நாளாக தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், சபரிவர்மன் மரணம் தொடர்பாக, நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மூவரையும் சஸ்பெண்ட் செய்து நெல்லை மத்திய சிறை எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் சில கைதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதுதொடர்பாகவும் காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், சிவகங்கை அஜித்குமார் ஆகியோரின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.






