கைது செய்யப் பார்க்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.திமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக புகார் எழுந்த நிலையில், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது. ஆனால் காவல்நிலையத்தில் இருவரும் ஆஜராகாத நிலையில், அது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறைக்கு செந்தில்பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், வழக்குப்பதிவில் தங்கள் பெயரே இல்லாதபோது, விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கின் கீழ் தங்களை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால், சட்டப்பிரிவு 35, 3ன் கீழ் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தான் ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால் தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்காகத் தாங்கள் ஆஜராகும் பட்சத்தில், இதனைப் பயன்படுத்தி வேறு எந்த வழக்கிலும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்றும் தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.






