--- --:--:-- --

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பூமணி காலமானார்..!

02

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பூமணி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவரது இறுதிசடங்கு சொந்த ஊரான கோவில்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் பூமணி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பூமணி, இளையரசனேந்தலில் தனது பள்ளிப்படிப்பையும், விருதுநகரில் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.

 

மறைந்த எழுத்தாளர் பூமணி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்தியவர். அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது பெரும்பாலான படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை.பூமணி 1966-ம் ஆண்டு முதல் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

 

 

பூமணி எழுதிய மொத்த 51 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு “அம்பாரம்” பொன்னி பதிப்பகத்தால் 2007-ல் வெளியிடப்பட்டது. முதல் நாவலான “பிறகு” 1979-ம் வருடம் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அங்காடி ஆகிய நாவல்கள் எழுதினார்.
இதில் ஆறாவது நாவலான “அஞ்ஞாடி” 2014-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. “அஞ்ஞாடி” நாவல் சுமார் 1100 பக்கங்கள் கொண்டது. 1899-ல் நிகழ்ந்த சிவகாசி கலவரம் மற்றும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு வன்முறை நிகழ்வுகள் குறித்து 150 கிராமங்களில் மேற்கொண்ட கள ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட நாவல் இது.

 

ஏழு ஆண்டுகால உழைப்பில் உருவான “அஞ்ஞாடி” நாவல், 2012-ல் கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவரது மற்றொரு நாவலான “வெக்கை” அசுரன் என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக வெளிவந்தது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Right Menu Icon