இடைத்தேர்தலில் தீய சக்தி தி.மு.க-வை வெளுத்து விடுங்கள்: கரூரில் விஜய் பேச்சு
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், “நான் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் என் வாழ்வில் சில வலிகளை என்றுமே மறக்க முடியாது. எல்லாவற்றையும் விட எனக்கு அதிக வலி தந்தது ‘கரூர் சம்பவம்’ தான். அரியலூர் பயணத்தை முடித்துவிட்டு நான் பெரம்பலூர் சென்றபோது, கூட்டம் அதிகமாக இருக்கிறது எனப் போலீசார் எங்களை எச்சரித்தார்கள்.
ஆனால், கரூருக்கு வரும்போது அவர்கள் எங்களை முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம் (Alert). காவல்துறை நினைத்திருந்தால் அந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்யாமல் எங்களை உள்ளே அழைத்துச் சென்று ஒரு நாடகத்தை நடத்தினார்கள்; நானும் அதை நம்பிவிட்டேன். இதற்கெல்லாம் யார் காரணம், யார் சொல்லி இதையெல்லாம் செய்தார்கள்? “அந்தத் துயரச் சம்பவத்தில் நாம் மழலைச் செல்வங்களை இழந்துள்ளோம். அந்த வலியோடு இருந்த என்னைச் சிலர் ஏளனமாகப் பேசினார்கள்; என் மீதே பழியைச் சுமத்தினார்கள்.
கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் அன்று முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அரசியல் செய்தார். நான் மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன். என் மீது பழி போட்டவர்களுக்கு, கடந்த 2026 தேர்தலில் மக்கள் கொடுத்த பதிலடியைப் போல, இனி அவர்களால் காலத்திற்கும் எழ முடியாத அளவிற்குப் பேரிடி கொடுக்க வேண்டும். கரூரில் நமக்கு எதிராக நடத்தப்பட்ட அந்தச் சதியையும், சூழ்ச்சியையும் யாரும் மறக்காத வண்ணம், கரூரில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
நமது அரசை ‘மாடல் மாடல்’ என்று சிலர் குறை கூறி வருகிறார்கள். ஆனால், அந்தத் தீய சக்தியும், தீந்து போன சக்தியும் ஒவ்வொரு துறையிலும் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்ற பெயரில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். சட்டமன்றத்தில் இதைக் கேள்வி எழுப்பியவுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். ஒவ்வொரு துறையிலும் அவர்கள் செய்த ஊழல்களின் முகமூடிகள் இப்போது கிழிந்து வருகின்றன. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் முறையான பதவி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. எந்தத் துறையிலும் ஊழலோ, லஞ்சமோ கிடையாது. தீய சக்தி என்பது ஓட்டைப் பாத்திரத்திற்குள் தண்ணீர் ஊற்றிய கதையாக மாறியுள்ளது. வரும் நாட்களில் இந்த அரசின் விஸ்வரூபம் உங்களுக்கே தெரியும்.
தீய சக்தி திமுக எங்குப் போய் நிற்கிறது.. யார் கதவை தட்டி கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டு களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள். நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்கிறார்கள். சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்.
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது எனச் சொல்லுங்கள்; நான் இருக்கிறேன் உங்களுடன். அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. நான் கரூருக்கு போகக் கூடாது என கட்டுப்பாடு போட பார்த்தனர். இது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். வர இருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை வெளுத்து விடுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.





