--- --:--:-- --

மாணிக்கம் தாகூர் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று சத்தியமூர்த்தி பவனில் 70 எம்.எல்.ஏ..!

3

மிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஸ்வநாதன், கட்சியின் கடந்த கால அரசியல் முடிவுகள் குறித்தும் தற்போதைய வளர்ச்சி குறித்தும் மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் சிலரின் ஆலோசனைகளை உரிய நேரத்தில் ஏற்றிருந்தால், தமிழகத்தில் காங்கிரஸின் நிலை இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

மேடையில் உரையாற்றிய அமைச்சர் விஸ்வநாதன், கடந்த காலங்களில் கட்சி சற்று சமயோசிதமான முடிவுகளை எடுத்திருந்தால் தமிழக காங்கிரஸின் தலைவிதியே மாறியிருக்கும் என்று குறிப்பிட்டார். “என்னுடைய அருமை நண்பர்கள் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் குரலுக்கு உரிய நேரத்தில் செவிசாய்த்து, அவர்களின் பேச்சை நாம் கேட்டிருந்தால், இன்று தமிழக அரசியல் களம் காங்கிரஸுக்கு சாதகமாக மாறியிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

 

அவ்வாறு நடந்திருந்தால், இன்று தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 70 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என்றும், ஒரு துணை முதலமைச்சர் பதவியோடு, 10 அமைச்சர்கள் பொறுப்பேற்று, சத்தியமூர்த்தி பவனில் சுழல் விளக்கு காரில் வலம் வந்திருப்பதை நாம் பார்த்திருக்க முடியும் என்றும் கடந்த கால அரசியல் வாய்ப்புகளை அவர் நினைவுகூர்ந்தார்.தான் பெற்ற இந்த அமைச்சர் பதவியின் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்த காங்கிரஸ் பேரியக்கமும் பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்த அவர், தங்களால் தமிழக மக்களுக்கோ அல்லது தமிழக முதலமைச்சருக்கோ எவ்வித குந்தகமும், பாதகமும் வராது என்று உறுதியளித்தார்.

 

 

தற்போதைய அரசு லஞ்சத்திற்கு ஒரு துளி கூட இடம் கொடுக்காது என்று கொள்கை ரீதியாக செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய விஸ்வநாதன், தமிழக முதலமைச்சரின் பலநோக்குத் திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றார். தனது உரையில் தனது எளிய குடும்பப் பின்னணியை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். கிராமத்தில் பிறந்து, கணவுகளோடு சென்னைக்கு வந்த ஒரு எளிய இளைஞனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியதாகக் கூறினார்.

 

 

“ஆற்றிலும் குளத்திலும் குளித்து, மரத்தின் கொம்பை ஒடித்துப் பல் துலக்கி, சோப்பு கூட போட முடியாமல் செங்கல்லைத் தேய்த்துக் குளித்த இந்த விஸ்வநாதன் இன்று அமைச்சராகியிருக்கிறான் என்றால், என் தந்தை ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த எளிய குடும்பத்தில் பிறந்த தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, கட்சித் தலைமை தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்று என்றும், தலைமை இடும் பணிகளைத் தான் செவ்வனே செய்யக் காத்திருப்பதாகவும் கூறினார்.

 

 

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் முதலமைச்சராக வர வேண்டும் என்ற கனவோடு தங்களுக்கு முன்னால் அண்ணன் திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஐயா கிருஷ்ணசாமி போன்ற மாபெரும் தலைவர்கள் வியர்வை சிந்தி உழைத்ததாக விஸ்வநாதன் குறிப்பிட்டார். அவர்களுக்குக் கிடைக்காத மகா பெரிய பதவிகள் இன்று அடியேன் விஸ்வநாதனுக்கும், ராஜேஷ் குமாருக்கும் கிடைத்திருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறினார்.

 

 

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றிருப்பது கட்சியின் அடுத்தகட்ட நகர்வைக் காட்டுகிறது. இனிவரும் காலங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வசந்த காலமாகவே அமையும் என்றும், அரசியல் பாதையில் தலைமை வழங்கும் அனைத்துப் பொறுப்புகளையும் திறம்படச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

 

Leave a Reply

Right Menu Icon