உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்காதது ஏன்? – விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் இதுவரை நேரில் சந்திக்காதது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் சம்பவத்தைப் போலவே பெரியபாளையம் சம்பவத்தையும் அரசு புறக்கணிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஆணவத்தையும் அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம், போதைப் பழக்கத்தின் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசை விமர்சித்துள்ளார்.
மாநிலத்தில் நடைபெறும் முக்கிய பிரச்சினைகள் மீது அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.





