காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்..!
காலை உணவுத் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சியின் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில், முதலமைச்சர் விஜய், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது தேர்தலின் போது தவெக வெளியிட்ட “வெற்றித் தமிழகம்” என்ற தொலைநோக்கு அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதையடுத்து ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திடும் வகையில், பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதற்கட்டமாக தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
மேலும் அரசு திட்டங்களை, குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.





