இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு?
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. பதில் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்த ஈரான், உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை மூடியது.
இதனால் சர்வதேச அளவில் உருவான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இந்தியாவிலும் எதிரொலிக்க, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமைதியாக இருந்த எண்ணெய் நிறுவனங்கள் மே மாதம் திடீரென விலையை உயர்த்தின.m சரியாக மே 15ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. திடீர் விலை உயர்வால் சென்னையில் லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 67 காசுகளுக்கும், டீசல் விலை 95 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனையானது.
அதன்பின் 4 நாட்கள் இடைவெளியில் மே 19ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் 86 காசுகளும், மே 23ஆம் தேதி பெட்ரோல் 82 காசுகளும், டீசல் 87 காசுகளும் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டன. மேலும் மே 25ஆம் தேதி திடீரென பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 77 காசுகளும், டீசல் 2 ரூபாய் 57 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 55 காசுகளும் விலை உயர்ந்தன. அதேபோல், ஈரான் – அமெரிக்கா மோதலுக்கு முன்பாக 868 ரூபாய்க்கு விற்ற சமையல் எரிவாயு 957 ரூபாய்க்கு விலையேறியது.
மேலும், வணிக சிலிண்டர் போருக்கு முன் ஆயிரத்து 899 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 3 ஆயிரத்து 283 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் பேரல் போருக்கு முன் 72 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்ட நிலையில் போரின் இடையே 115 டாலர் வரை உயர்ந்து தற்போது 82 டாலராக சற்று விலை குறைந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகி உலக நாடுகளுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என்று நிதி ஆலோசகர் விவேக் கர்வா தெரிவித்துள்ளார். அதேநேரம் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். தங்கம், வெள்ளி விலை புது உச்சம் தொடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என பொருளாதார ஆலோசகர் வள்ளியப்பன் நாகப்பன் கூறினார். அமெரிக்கா – ஈரான் இடையே வரும் வெள்ளிக்கிழமையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அதற்குள் நிலைமை மாறலாம் என்ற அச்சமும் நிலவுவதாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.





