ரஜினி பெயரை பயன்படுத்த தடை..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக் காரணத்தினால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். ஆனால், அரசியல் களத்தில் ரஜினிகாந்த் பெயர் அவ்வப்போது தொடர்ந்து ஏதோ ஒரு காரணத்தால் பேசப்பட்டு வருகிறது. பல கட்சிகளும் ரஜினியின் நெருக்கத்தை விரும்பியே வந்துள்ளன.
அந்த வகையில், அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, WE THE LEADERS என்ற புதிய இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலையும் ரஜினியுடனான தன் தொடர்பை வெளிப்படுத்தி இருந்தார். புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த போது, தன்னை அழைத்ததாக கூறி, அவரது ஆதரவாளர்களை தன் வசப்படுத்தும் வகையில் பேசினார்.
அண்ணாமலையின் புதிய அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்பே, கோவை உக்கடத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட அன்றே மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை லதா ரஜினிகாந்த் தொடங்கினார் என்ற தகவல் வெளியானது.
அண்ணாமலை இயக்கத்துடன் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதை காட்டுவது போல் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். எனினும், அடுத்த நாளே சென்னை அருகே பொன்னேரியில் நடைபெற்ற அண்ணாமலையின் பிறந்தநாள் விழா நிகழ்வில் மேடையில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் முன்பே, ரஜினியின் தீவிர ரசிகரும், சிறுவயது முதலே ரஜினியின் பார்வையில் வளர்ந்தவருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்தார். இதனால், ரஜினிகாந்த்தை மையப்படுத்தி பல்வேறு ஊகங்கள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்தின் பெயர் அல்லது புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி காந்துடன் நெருக்கம் காட்டிய அண்ணாமலை மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் அறிவிப்புகளால் எந்தக் குழப்பமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.





