தமிழ்நாட்டில் SIR ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவு..!
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்த படிவங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடந்த 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதலில் 7 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து வழங்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





