வரும் 12-ம் தேதி முதல் கடும் குளிர் இருக்கும்..!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி முதல் கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வாரம் பரவலாக கனமழை பெய்து வந்தது. புயல் வலுவிழந்து கரையை கடந்த பின் மழை ஓய்ந்தது. அதன்பின், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வரும் 12ஆம் தேதி வாக்கில் வறண்ட காற்று வீசலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மத்திய பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் மத்திய மாநிலங்களில் குளிர் அலை போன்ற நிலை காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார். பெங்களூரு-ஒசூர் நகரங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸாக குறையலாம் என்றும் உதகை, கொடைக்கானலில் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் பதிவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவலாம் என்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.





