பவாரியா கொள்ளையர்களுக்கு எத்தனை ஆண்டு சிறை?
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பவாரியா கொள்ளையர்களில், ஒருவருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், இருவருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.
கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேரை குற்றவாளிகள் என அறிவித்து, நவம்பர் 21 ம் தேதி தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜெயில்தார் சிங்கும் ஆஜராகினர். இதில், ராகேஷுக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, மற்ற இருவரான ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனையும், தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி, தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜெயில்தார் சிங்கை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து அவரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.






