நாளை காஞ்சிபுரத்தில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். அந்த துயரத்தில் இருந்து மெல்ல மீண்டு வந்த அவர், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, தனது கட்சியின் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டினார். அந்த பொதுக்குழுவில், மீண்டும் த.வெ.க.வின் மக்கள் பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.பொதுக்கூட்டங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, மீண்டும் மக்கள் சந்திப்புக்கு ஆயத்தமான விஜய், அதற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் 4,000 பேரைத் தேர்வு செய்து ’மக்கள் பாதுகாப்புப் படை’யை உருவாக்கினார்.
அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறைத் துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்டு பயிற்சியும் அளித்தார். இந்த பயிற்சி சென்னை செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சேலத்தில் டிசம்பர் 4-ல் நடக்க இருந்த பிரசாரம் தள்ளிப்போன நிலையில், தற்போது காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தனது முதல் மக்கள் சந்திப்பை நாளை (நவம்பர் 23, 2025) நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நாளை காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தனது X பக்கத்தில்: “தலைமை நிலையச் செயலக அறிவிப்பு மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்களில் 2000 பேரை சந்திக்கும் இந்த நிகழ்வின் பாதுகாப்புப் பணிகளை, விஜய் உருவாக்கிய மக்கள் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.






