கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலமானார்.’வணக்கம் வள்ளுவ’ என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவரான ஈரோடு தமிழன்பன்(92), மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் சிறப்பாற்றல் கொண்டவர். மரபுக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டவர் கவிஞர் தமிழன்பன்.
இவர், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றினார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டில் இன்று (சனிக்கிழமை) மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஈரோடு தமிழன்பன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து தமிழுக்கு வளம் சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் கவிஞர் தமிழன்பன் வீட்டிற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் ஈரோடு தமிழன்பன் மறைவிற்கு அரசியல் கட்சியினர் மட்டுமில்லாது கவிஞர் வைரமுத்து மற்றும் இலக்கியத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






