திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது!
திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீண்ட கால நெருங்கிய உறவு முறிவினால் குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்துவது தவறு எனக் கூறி, நெல்லையைச் சேர்ந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் தேவா விஜய், இவர் மீது அவருடன் கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். புகாரில், இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம்பெண் குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் போலீசார் தேவா விஜய் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிபதி பி. புகழேந்தி தனது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: மனுதாரரும் புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாகப் பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால நெருக்கத்தில் புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததைக் காணும்போது, இருவருக்கும் இடையேயான உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது என்பதைக் குறிக்கிறது.
அப்போது தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இருவரும் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினைப் பயன்படுத்துவது தவறு.
சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா அல்லது வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிப்பது சாத்தியமில்லை.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தைப் பார்த்துத் தீர்ப்பு வழங்க முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்று கருதுவதாகத் தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.





