ஹேப்பன் செயலி மூலம் பழகி ரூ.6 லட்சம் தங்கம் கொள்ளை..!
ஹேப்பன் (Happn) ஆஃப் மூலம் அறிமுகமான நபருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 2 மென்பொருள் பொறியாளர்களைப் பெங்களூரு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நபர் நவ.8ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கவிப்ரியா தனது ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்து சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட அந்த நபர், 2 மாதங்களுக்கு முன்பு ஹேப்பன் டேட்டிங் செயலி மூலம் கவிப்ரியாவுடன் நண்பராகியுள்ளார்.
தொடர்ச்சியான உரையாடலுக்குப் பிறகு, நவம்பர் 1ஆம் தேதி இந்திரநகரில் உள்ள ‘தி ரிசர்வாஸ்ர்’ (The Reservoire) உணவகத்தில் இருவரும் சந்தித்தனர், அப்போது மது அருந்தியுள்ளனர். பின், கவிப்ரியா அவரை அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அறை பதிவு செய்து உள்ளார். இருவரும் இரவு உணவை முடித்த பிறகு, கவிப்ரியா கொடுத்த தண்ணீரைக் குடித்ததும், பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் காலை கண்விழித்தபோது, தன்னிடமிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்திரநகர் காவல் துறையினர் ஹோட்டலின் சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு துப்புத் துலக்கினர். அதன் அடிப்படையில் தமிழகத்திற்குச் சென்று, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த 2 ஐ.டி. ஊழியர்களையும் கைது செய்தனர். கவிப்ரியாவும் ஹர்ஷவர்தனும் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை காரணமாகக் கடன் சுமை அதிகமாகியுள்ளது. அந்தக் கடனை அடைப்பதற்காகவே இருவரும் சேர்ந்து இந்தக் கொள்ளைத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





