இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், சிக்கல், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நன்னிலம், ஆண்டிப்பந்தல், சேந்தமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
அதேபோல், கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, பட்டவர்த்தி, குத்தாலம், மல்லியம், தரங்கம்பாடி, பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையால் சம்பா பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. கொள்ளிடம், எடமணல், திருமுல்லைவாசல், பழையார், கூழையார் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் இதமான சூழல் உருவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், பாடாலூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருவிடைமருதூர், ஒரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.





