சென்னை அருகே நடுவானில் வெடித்த விமானம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் அருகேயுள்ள தண்டலம் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. எனினும், விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினார்.தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சுமன் என்ற விமானி இந்த விமானத்தை இயக்கியுள்ளார்.
நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிந்த அவர், விபத்தைத் தவிர்க்க உடனடியாகத் தன் பாதுகாப்பிற்காக பாராசூட் மூலம் குதித்துள்ளார். விமானி வெளியேறிய சிறிது நேரத்தில், அந்த விமானம் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி, திருப்போரூரிலுள்ள ஒரு தனியார் உப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் அருகிலுள்ள பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) பக்கத்தில் உள்ள சேறும் சகதியுமான பகுதிக்குள் விழுந்து புதைந்தது. விமானம் சுமார் ஏழு முதல் எட்டு அடி வரை சேற்றுக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
விமானம் வெடித்துச் சிதறியபோது, அது தனியார் நிறுவனத்தின் கட்டிடத்திற்கு மிக அருகில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அந்த விமானம் கட்டிடம் மீது விழாமல் சேற்றுப் பகுதிக்குள் விழுந்தது. இதனால், உள்ளே பணிபுரிந்த பணியாட்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
விமானி சுமன், பாராசூட்டில் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் பறந்து, தண்டலம் பகுதியில் உள்ள ஒரு பாலாஜி கல்லூரிக்கு முன்பாக ஆளில்லாத பகுதியில் (பக்கிங்காம் கெனால் அருகிலுள்ள) கீழே இறங்கியுள்ளார்.
மயங்கிய நிலையில் இறங்கிய விமானியை, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 18, 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் உடனடியாகக் கண்டு, அவரைத் தூக்கிச் சென்று காப்பாற்றியுள்ளனர். அவர்களே விமானிக்கு முதலுதவியும் அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் திருப்போரூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேடார் மூலம் விபத்து குறித்த தகவல் தாம்பரம் விமானப்படைக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையும், காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
மயங்கிய நிலையில் இருந்த விமானி சுமனை, ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மீட்டு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.
விபத்துக்கான சரியான காரணம், அதாவது என்ஜின் கோளாறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது, விமானப்படையின் தொடர் விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். மீட்புப் பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து விண்ணில் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






