குடியரசு தினத்தில் செங்கோட்டைக்கு டார்க்கெட்..!
டெல்லி செங்கோட்டையில் கடந்த குடியரசு தினத்தன்று, சதிகாரர்கள் குண்டு வைக்க திட்டமிடப்பட்டிருந்தது அம்பலமாகி உள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பதுக்கியதாக மருத்துவர் முஜாமில் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணை மற்றும் அவரது செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மருத்துவர் முஜாமிலின் செல்போன் சிக்னல் செங்கோட்டை பகுதியில் பலமுறை பதிவானது தெரியவந்துள்ளது.சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பின் தீவிரத்தை கண்காணிக்கவே பலமுறை செங்கோட்டைக்கு அவர் வந்து சென்றதாக கூறப்படுகிறது.
\
மேலும், அவர் தனது கூட்டாளியான உமர் நபியுடன் செங்கோட்டை பகுதிக்கு பலமுறை வந்தது அங்கிருந்த பல்வேறு சிசிடிவிக்களில் பதிவாகி உள்ளது.இந்நிலையில், கடந்த குடியரசு தினத்தன்று நடத்த இருந்த தாக்குதல் கடுமையான பாதுகாப்பு காரணமாக தோல்வியில் முடிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடந்த தீபாவளியின் போது கூட்டம் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக முஜாமில் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் பதுக்கிய வழக்கில் கைதான 3 மருத்துவர்கள் பணியாற்றிய அல் ஃபலா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலம் தாஜ் கிராமத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.






