--- --:--:-- --

ஈபிஎஸ் எடுத்த முக்கிய நடவடிக்கை..!

3

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

 

இதைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சூழ்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உருவானது. அதன்பிறகு செங்கோட்டையன் அமைதி காத்து வந்த நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இச்சூழ்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

தொடர்ந்து அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.இந்த சூழலில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உடன் இணைந்து அவர்களுடன் சேர்ந்து பணியாற்றப்போவதாக தெரிவித்தார்.

 

இதனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.இந்த நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னதாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளராக சத்தியபாமா பதவி வகித்து வந்தார். செங்கோட்டையன் கட்சிப் பதவி பறிக்கப்பட்ட சமயத்தில் தங்கள் கட்சி பதவியை சத்தியபாமா உட்பட அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon