இந்தியாவின் முதல் ‘பசுமை சர்வதேச ட்ராப் ரேஞ்சுக்கு’ தமிழக அரசு அனுமதி!
சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழக வீரர்களின் கொடியை மேலும் உயர்த்துவதற்காக, மாநில அரசு, இந்தியாவின் முதல் பசுமை சர்வதேச தரத்திலான 6-ட்ராப் ரேஞ்ச் மற்றும் ட்ராப், ஸ்கீட் துப்பாக்கி சுடும் அகாடமி திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் இந்த உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதியை அமைக்க, தமிழக அரசு ரூ.17.01 கோடி நிதியை அனுமதித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, தமிழகத்தின் துப்பாக்கிச் சுடும் விளையாட்டுத் துறைக்கான புதிய சகாப்தம் பிறக்கும் என்று உறுதியளித்தார்.
அரசு உத்தரவின்படி, கீரப்பக்கத்தில் உள்ள 18.3 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே துப்பாக்கி சுடும் அகாடமியுடன், ஒரு சைக்கிள் மோட்டோகிராஸ் (BMX) தடமும் அமையவுள்ளது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்த மையத்தை ஒரு ‘பசுமை’ வசதியாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில், ஆறு ட்ராப் ஹவுஸ்கள், கட்டுப்பாட்டு அறைகள், நிழல் உள்ள சுடும் தளங்கள், நிர்வாக கட்டிடம், ஆயுதக் கிடங்கு, பார்வையாளர் கூடங்கள் என சர்வதேச போட்டிகளுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே. மேகநாத ரெட்டி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த அகாடமி, ஒலிம்பிக் போன்ற பெரிய சர்வதேச நிகழ்வுகளில் இடம்பெறும் ட்ராப் மற்றும் ஸ்கீட் போட்டிகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் போட்டி இடமாகச் செயல்படும். தமிழ்நாட்டு துப்பாக்கிச் சுடும் வீரர்கள் சர்வதேச அளவில் பிரகாசிப்பதாலேயே, இந்த முடிவை அரசு எடுத்தது.
இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ரைபிள் சுடும் அகாடமியும் வருவதால், ரைபிள் மற்றும் ட்ராப் துப்பாக்கி சுடுதலுக்கான ஒரு வலுவான விளையாட்டுச் சூழல் விரைவில் தமிழகத்தில் உருவாகும்” என்றார்.
போட்டித் துப்பாக்கி சுடும் வீரரான டி.ஆர்.எஸ். முத்துக்குமார், இந்த முயற்சி குறித்து கூறுகையில் “தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளை நடத்தக் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு ரேஞ்சுகள் அவசியம். இப்போதுவரை, அத்தகைய வசதிகளுக்காக நாங்கள் டெல்லியைத்தான் நம்பியிருக்கிறோம். இந்த அகாடமி திறக்கப்பட்டால், சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளைத் தமிழகத்திலேயே நடத்த முடியும்.
ட்ராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் ஒரு அதிகச் செலவு பிடிக்கும் விளையாட்டு என்பதால், “வரவிருக்கும் இந்த அகாடமியால், ஆர்வமுள்ள இளம் வீரர்கள் தரமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தொழில்முறை துப்பாக்கி சுடும் ரேஞ்ச் ஆகியவற்றை எளிதில் பெற முடியும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.






