கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமை.. நெஞ்சம் பதறுகிறது” – தவெக தலைவர் விஜய்!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவர் நேற்றிரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் காட்டுப் பகுதியில் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள், கார் கண்ணாடியை உடைத்து விட்டு ஆண் நண்பரை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
ஆண் நண்பர் நிலைகுலைந்த நிலையில், அந்தக் கும்பல் கல்லூரி மாணவியை காட்டுப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர்.இதற்கிடையே, அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் மயக்கம் தெளிந்த பிறகு காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியின் ஆண் நண்பர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மாணவியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைதுசெய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். குற்றச்சம்பவம் நடைபெற்ற பிருந்தாவன் நகர்ப் பகுதியில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை.
அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?. கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.





