--- --:--:-- --

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

3

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

 

குறிப்பாக, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடக உட்புறத்தின் தரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதனால், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இது, அதற்கு அடுத்த 24 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon