--- --:--:-- --

காலணி வீச முயன்ற வழக்கறிஞர்..!

3

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி வந்தார். அப்படி ஒரு வழக்கு விசாரணையின்போது, அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தனது காலணியைக் கழற்றி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நோக்கி வீச முற்பட்டார்.

 

உடனே அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள், அந்த வழக்கறிஞரை மடக்கி பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என முழக்கமிட்டார். தொடர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய நீதிமன்ற காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணையின் போது இப்படியொரு மோசமான சம்பவம் நடைபெற்றதும், நீதிமன்ற வளாகமே பரபரப்பில் ஆழ்ந்தது. ஆனால், அந்தச் சூழலிலும் நிதானத்தை இழக்காத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. தொடர்ந்து வாதங்கள் நடக்கட்டும்” என பரபரப்பின்றி அமைதியாக தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், நிதானம் காத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், வழக்கு விசாரணையையும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து வாதிட சொன்னது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிடிபட்ட அந்த வழக்கறிஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முற்பட்ட வழக்கறிஞரின் பெயர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது. தற்போது ராகேஷ் கிஷோரிடம் டெல்லி காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை புதுப்பிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர், கஜுராஹோ கோயிலில் சேதமடைந்த 7 அடி விஷ்ணு சிலையை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அப்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என சொல்கிறீர்கள்.

 

அதனால், தெய்வத்திடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். அது தொல்லியல்துறையின் கீழ் இருக்கும் தளம். எனவே ஏ.எஸ்.ஐ.யிடம் அனுமதி கொடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

 

தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பலரும் கருத்து பதிவிட்டுவந்தனர். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon