--- --:--:-- --

தவெகவின் 2வது மாநில மாநாடு.. சிறப்பு பாடலுடன் என்ட்ரி கொடுத்த விஜய்.!

1

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் தொடங்கியது அதில் சிறப்பு பாடலுடன் விஜய் என்ட்ரி கொடுத்தார். சினிமாவில் இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

 

அதன் ஒரு பகுதியாக, தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், 2ஆவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது.
மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும் 60 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

ஒவ்வொரு கேலரியின் முகப்பிலும் தொண்டர்களின் வருகையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் வகையில் க்யூ.ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநாட்டுக்கு நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு மேல் மங்கள இசையுடன் தவெக மாநாடு தொடங்கியது. பின்னர் விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து “உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா” என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.

 

தொடர்ந்து விஜய் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் தவெக கட்சி துண்டுகளை வீசி தங்களது வரவேற்பை தெரிவித்தனர். மேலும் சில தொண்டர்கள் தடுப்பு கம்பிகளை மீறி நுழைய முயன்றனர். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon