--- --:--:-- --

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்..!

2

மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கைகுலுக்கிக்கொண்டு சமாதானம் அடைந்தனர். அண்மையில் பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

 

இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். இதற்கிடையே, மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வைகோ அறிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார். மேலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

 

அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்றும் 15 நாட்களில் தன்னிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மல்லை சத்யாவுக்கு வைகோ உத்தரவிட்டிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon