--- --:--:-- --

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

9

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு 15-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் டாக்ஸி போன்ற சொந்த வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இந்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

பல வாகன உரிமையாளர்களிடம் ஃபாஸ்டேக் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் திருமலைக்கு வருவதற்கு முன்பே அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஃபாஸ்டேக் இல்லையென்றால், அலிகிரி சோதனைச் சாவடியில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, எதிர்காலத்தில் திருமலைக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) மட்டுமே அனுமதிக்கவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆந்திரப் பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகமும் திருப்பதி மற்றும் திருமலைக்கு இடையே எலக்ட்ரிக் பேருந்துகளை மட்டுமே இயக்கத் திட்டமிட்டுள்ளது.

 

பக்தர்களின் வசதிக்காக, அலிகிரி சோதனைச் சாவடியில் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து ஃபாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள், இங்கு ஃபாஸ்டேக் பெற்ற பின்னரே திருமலைக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒத்துழைக்கத் தவறினால், வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon