நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மருத்துவ சிகிச்சை என்பதே நோக்கம் – முதல்வர் ஸ்டாலின்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நலமுடன் இருப்பதாக கூறி தனது உரையை தொடங்கினார். மருத்துவமனையில் இருந்த போதும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் நிலவரத்தை கேட்டறிந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியிடம், மருத்துவமனையில் இருந்தவாறே கோரிக்கை மனுவை தயாரித்து அனுப்பிவைத்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், மக்களை சந்தித்தால், உடலில் பாதிப்பு இருந்தால் கூட தனக்கு சரியாகி விடும் என்று முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கு இணையான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று கூறினார். மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என்று அழைக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்றது பேருதவியாக இருந்தது என்று பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கும் மேற்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
சிறந்த மருத்துவர்களைக் கொண்டு ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை உள்ளிட்ட 17 தனித்துவமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. இது தவிர, கண், காது, மூக்கு, தொண்டை, முழு உடல் பரிசோதனை, எக்ஸ்ரே, ஈசிஜி, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விபரங்களை www.nhm.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




