ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கிடந்த பிரபல நடிகர்!
பிரபல மலையாள திரைப்பட நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 51. மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகராக இருப்பவர் கலாபவன் நவாஸ். 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்கிற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார்.
மிமிக்ஸ் ஆக்ஷன் 500 (1995), ஹிட்லர் பிரதர்ஸ் (1997), ஜூனியர் மாண்ட்ரேக் (1997), மாட்டுப்பெட்டி மச்சான் மற்றும் அம்மா அம்மையம்மா (1998), சந்தமாமா (1999), மற்றும் தில்லானா தில்லானா (2003) போன்ற பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல், கலாபவன் நவாஸ் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
அவரது தந்தை அபூபக்கர் கேரளாவில் புகழ்பெற்ற நாடகக் கலைஞர். பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். கலாபவன் நவாஸின் மனைவி ரெஹானா மற்றும் சகோதரர் கலாபவன் நியாஸ் ஆகியோரும் நடிகர்கள் தான். இதற்கிடையே தான் பிரகம்பனம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கொச்சிக்கு சோட்டானிக்கராவில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் கலாபவன் நவாஸ்.
நேற்று மாலை படக்குழு வெளியே செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் நவாஸ் ரூமை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரைத் தேடி சென்று பார்க்கையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார். இதன்பின் ஹோட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் நவாஸை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். முதல்கட்ட தகவலில் நவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இல்லை என்றும் போலீஸ் தெரிவித்துள்ளனர். எனினும் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். பின்னர் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





