தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் – இன்று தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்
தமிழக மக்களின் உரிமைகளை மீட்க அன்புமணி ராமதாஸ் செல்லவிருக்கும் நடைபயணம் இன்று தொடங்குகிறது.
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், ராமதாஸின் பிறந்தநாளான இன்று, தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்கிறார் அன்புமணி ராமதாஸ்.
இந்த நடைபயணம் இன்று சென்னை திருப்போரூரில் தொடங்கி, வரும் நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடைகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம், தமிழகம் தழுவியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் காவல்துறையில் மனு அளித்திருந்தார்.
மேலும் தனது அனுமதி இல்லாமல், நிர்வாகிகளை நியமிப்பது, நடைபயணம் செல்வது போன்ற செயல்களை அன்புமணி மேற்கொள்வதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். அன்புமணியின் இந்த நடைபயணத்திற்கு காவல்துறை நேற்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.






