தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம்..!
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், நிலையான விலையில் அதிக தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) கொண்ட மாநிலங்களில் கர்நாடகாவும் தமிழகமும் முன்னணியில் உள்ளன. மக்களவையில் கிரிதாரி யாதவ் மற்றும் தினேஷ் சந்திர யாதவ் ஆகிய இரு எம்பிக்கள் நாட்டின் தனிநபர் வருமான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் கொடுத்துள்ளார்.
அதில் நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் கர்நாடகாவும், இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம் இடத்தில் ஹரியானா இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, கர்நாடகாவில் தனிநபர் வருமானம் ரூ. 2,04,605, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 1,96,309, ஹரியானாவில் தனிநபர் வருமானம் ரூ. 1,94,285 எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பது குறித்து தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு 2024-2025ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது எனப் பாராட்டப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவரும் புதுமையான திட்டங்கள்தான் காரணம். அத்திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம்; புதிய உச்சம் எனும் வெற்றிக்கு அடித்தளங்கள்.
இப்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குச் சூட்டியுள்ளது. 21.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710. இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள், சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும், தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படவேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத் திறன்களாலும், சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




