--- --:--:-- --

7 மணி நேரப் போராட்டம்… தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்

1

சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ஆயில் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காலை 5 மணியளவில் தீ பற்றியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 7 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். மணலியில் இருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இன்று காலை 5 மணி அளவில் தீப் பற்றியது. முதலில் ஒரு பெட்டியில் பற்றிய தீ படிப்படியாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீ பரவியது.

 

இந்த சம்பவம் ஏற்பட்டதும், சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து விவரமறிந்து உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தீ, மேலும் அடுத்தடுத்த பெட்டிகளுக்குப் பரவாத வண்ணம், ரயிலில் இருந்த மற்ற பெட்டிகளைக் கழற்றித் தனியே கொண்டு சென்றனர்.

 

மேலும், ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகே இருந்த குடியிருப்புவாசிகளை உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், வீடுகளில் இருந்த சிலிண்டர்களை அகற்றினர். அதேபோல், வீடுகளுக்குச் செல்லும் மின் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

ரயில்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் வசதிக்காக அவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி ரயில் பற்றி எரிவதைப் பார்த்தனர். காவல்துறையினர், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பொதுமக்களை ரயிலின் அருகே வரவிடாமல் அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 7 மணி நேரமாகப் போராடிப் பெரும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து, அதனை அணைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon