எம்.பி சம்பளம் போதவில்லை.. அரசியல் அதிக செலவு கொண்ட பொழுதுபோக்கு – கங்கனா ரனாவத்
எம்.பி., பதவி மூலம் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்றும், அரசியல் அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு என்றும் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை கங்கனா ரணாவத், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலம், மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட போது ஆண்டிற்கு 60 முதல் 70 நாட்கள் வேலை பார்த்தால் போதும் என தனக்கு சொல்லப்பட்டதாகவும் ஆனால் அப்படி இல்லாமல் அதிக வேலைகள் இருப்பதாக கூறினார்.எம்.பி., பதவி மூலம், தனக்கு வரும் சம்பளம் போதவில்லை எனக் கூறும் கங்கனா ரணாவத், தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல 300 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்காக லட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் வாங்கும் சம்பளத்தில் தனது ஓட்டுநர் மற்றும் பிற பணியாளர்களுக்கு வழங்கியது போக தனக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மட்டுமே கிடைப்பதாக கூறும் கங்கனா ரணாவத் அரசியல் அதிக செலவு கொண்ட ஒரு பொழுது போக்கு என்றும் பேசியுள்ளார்.கங்கனா ரணாவத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, எம்.பி.யாக கடமையாற்ற முடியவில்லை என்றால் கங்கனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




