தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு மற்றும் பரங்கிபேட்டையில் 40.0° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 20.0 ° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-3° செல்சியஸ் குறைந்துள்ளது.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35–40° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40° செல்சியஸை ஒட்டியும், வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-40° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 18-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
16.05.2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



