அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்!
மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.
மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். இதேபோல, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று பிற்பகல் வரை மணப்பாக்கம் இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் முகலிவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.அதன்படி, முகலிவாக்கம் மின் மயானத்தில் காவல்துறையினரின் 21 குண்டுகள் முழங்க ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




