--- --:--:-- --

கோயில் கருவறைக்குள் சமத்துவம் நிலவ வேண்டும் – முதலமைச்சர்

1

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயில் கருவறைக்குள் சமத்துவம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் 2 நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இதனை ஒட்டி, நாதஸ்வர தவில் இசையுடன், ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து, காணொலி வாயிலாக கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது, மாநாட்டில் இறை வணக்க பாடலை சீர்காழி சிவ.சிதம்பரம் பாடிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்து பட்டியலிட்டார். குறிப்பாக நிலம் மீட்பு, புனரமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மேற்கொள் காட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும் என்று கூறினார். மேலும், கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய அறநிலையத்துறையும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon