ஜெ.க்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாரா? ஓபிஎஸ் திகார் சிறைக்கு செல்வார் – ஈபிஎஸ்
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கோவையில் ஆலோசனை நடத்தினார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் இருந்த போது கோப்புகள் அனைத்தும் தன்னிடம் வந்துதான் செல்லும் என்றார்.
அதில் பல தவறுகள் இருந்தன எனவும், அந்த ரகசியங்களை நான் அவிழ்த்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும் என கூறினார்.இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் அவர் தான் திகார் சிறைக்கு செல்வார் என்று பதிலடி கொடுத்தார். தன் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்க பார்க்கிறார் எனவும் சாடினார். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தன் மீது வழக்கு போட்டதும், உச்ச நீதிமன்றம் வரை சென்று தான் குற்றமற்றவன் என நிரூபித்தேன்.
ஆனால், தற்போது திமுகவில் முன்வரிசையில் இருக்கும் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் உள்ளதால் அவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார். ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாக ஓ.பன்னீர்செல்வம் கூறியது வெட்க கேடானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஓபிஎஸ் இடையில் தான் கட்சிக்கு வந்தார்.
போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது வெண்ணிறாடை நிர்மலாவிற்கு ஏஜென்டாக இருந்தவர் ஓபிஎஸ் எனவும் சாடினார்.மேலும், தன் மீது குற்றம் இருந்தால் ஓபிஎஸ் அதை சொல்லட்டும் என்று ஈபிஎஸ் சவால் விடுத்தார். அப்படி ஏதாவது இருந்தால் திமுக தன்னை விட்டு விடுவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
எனவே, தனது ரகசியங்கள் எதுவாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் சொல்லட்டும் என சவால் விடுத்தார். ஆனால், பல வழக்குகளை ஓபிஎஸ் சந்தித்து கொண்டு இருப்பதால் அவர் தான் உள்ளே போவார் என்றார். 1974 ஆம் ஆண்டில் இருந்து இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் நாங்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஓபிஎஸ் துரோகம் செய்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அத்துடன், தூத்துக்குடியில் வக்கீல் ஓடை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 80% பணிகள் நிறைவடைந்தன. எஞ்சிய பணிகளை திமுக அரசு முறையாக முடித்திருந்தால் அங்கு பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா, வர்தா உள்ளிட்ட புயல்கள் வந்த போது அதிமுக அரசு திறம்பட செயல்பட்டது. இப்போது மழை மட்டுமே பெய்துள்ளது. அதற்கே திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று தான் கேட்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு, மாநில அரசின் நிதியில் உடனடியாக உதவிகளை செய்ய வேண்டும். மத்திய அரசின் மீது குறை சொல்லிக் கொண்டுருப்பது வேதனை அளிக்கிறது. அதேபோன்று மத்திய அரசும் மாநில அரசுக்கு நிதியை வழங்கிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




