--- --:--:-- --

பிரேமலதாவிற்கு அண்ணாமலை கொடுத்த வாக்கு..!

4

தமிழ்நாடு வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு 900 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியதாகவும், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

 

மேலும், பதவிக்கு ஏற்றவாறு நாக்கில் வார்த்தைகள் அளந்து வரவேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, அப்பன் என்ற வார்த்தை தவறானதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

அதே வேளையில் அமைச்சர் உதயநிதி பொறுப்புடன் பேசவேண்டும் என கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, சமீபத்தில் எண்ணூர் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் வலியுறுத்தியதாகவும், இருவரும் தங்களுக்கு உறுதி அளித்திருப்பதாக கூறினார்.

 

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்து வந்த நிலையில், அண்மையில் எந்த கூட்டணியிலும் தேமுதிக இடன்பெறவில்லை என பிரேமலதா கூறியிருந்தார்.

 

அடுத்தாண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் தேமுதிக நகர்வுகள் மீண்டும் பாஜக கூட்டணியில் இடம்பெறும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon