‘காசு கொடுத்து தண்ணி வாங்கிங்கங்க…’ புதுப்பாளையம் ஊராட்சி அலட்சிய பதில்…ரோடு பணியால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு!
புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பிளாசம் குடியிருப்பில், தார் ரோடு பணியின் போது குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், அதனை சரி செய்யவோ, அல்லது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யவோ ஊராட்சி நிர்வாகம் முன்வராததால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பிளாசம் குடியிருப்பு மற்றும் மதுரா நகர். ஊராட்சித் தலைவராக கஸ்தூரி பிரியா இருந்து வருகிறார். இங்கு, குடியிருப்புவாசிகளின் நிதி பங்களிப்போடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக பொக்லைன் வைத்து மண் ரோட்டினை சமன்படுத்தியபோது, பல இடங்களில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படவே, ஓரிரு நாட்கள் அதனை பொறுத்துக் கொண்ட குடியிருப்புவாசிகள், அதன் பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் இதுபற்றி முறையிட்டனர்.
ஆரம்பத்தில் பொதுமக்களின் தொலைபேசியை எடுக்காத ஊராட்சித் தலைவர், பின்னர் ”குடிநீர் குழாய் விரைவில் சரி செய்யப்படும். அதுவரை தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொள்ளுங்கள்” என்று அலட்சியமாக பதில் அளித்தார். சரி, ஒன்றிரண்டு நாளில் தண்ணீர் பிரச்சனை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு குடியிருப்புவாசிகளும், பணம் கொடுத்து லாரிகளில் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆனால், ஊராட்சி நிர்வாகம் சொன்னபடி பிளாசம் குடியிருப்பு வளாகத்தில் பழுதடைந்த தண்ணீர் குழாய்கள் சரி செய்யப்படவில்லை. இதுபற்றி ஊராட்சித் தலைவரிடம் கேட்டால் “ஊராட்சியில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சாலைப்பணி நடக்கிறது. ஆனால், பிளம்பர்கள் 2 பேர்தான் உள்ளனர். மெயின் லைன் பைப் உடைந்துவிட்டதால், அவர்களும் அங்கு சென்றுவிட்டனர்.
எனவே, பழுதடைந்த வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை சரி செய்யமுடியவில்லை. அதுவரை தண்ணீரை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மீண்டும் அலட்சியமாக பதில் அளித்தார். இத்தனைக்கும் பிளாசம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தண்ணீர் டேங்கில் முழுமையாகத் தண்ணீர் இருந்தும், அதனை வழங்க ஊராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இவ்வாறு, எந்தவொரு திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொண்டு வரும் பணிகளால் மதுரா நகர், பிளாசம் ஆகிய குடியிருப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் குடிநீர் வினியோகம் முழுவதும் தடைபட்டுள்ளது. ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக இதேநிலை நீடிப்பதால், பொதுமக்கள் தண்ணீரின்றி பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகமும் “பொதுமக்கள் வாங்கி ஊற்றிக் கொள்ளட்டும்” என்று அலட்சிய பதில் சொல்லி வருவதால், இந்த விஷயத்தில் இனி அவிநாசி தாசில்தார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த குடிநீர் குழாய்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, உடனடியாக தண்ணீர் வினியோகம் சீரடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




