--- --:--:-- --

விஜய் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பில்லை – சீமான்

1

தமிழக கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினம்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் எம்செண்ட், கருங்கல், மணல் உள்ளிட்டவை அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. இதனை முழுவதுமாக தடுத்து நிறுத்த கோரி விவசாயிகள் பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

 

அந்தவகையில் இன்று மாலை செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மலை வளம் மக்களுக்கானது, அது வியாபாரப் பொருள் அல்ல. அதனை கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது.
காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிற எண்ணம் வராது. மாணவர்கள் எல்லா தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டு, யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பாக ஹிட்லர் உட்பட அனைத்து தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற எல்லா தலைவர்களின் கருத்தையும் படித்து தெரிந்து கொண்டு நல்லதை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

 

தொடர்ந்த பேசிய அவர், ‘செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்ற பயத்தினால் தான் இது போன்ற வேலைகளில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அவர் ஊழல் மூலம் பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொடுத்தார் என்பது வெளிவரும். அதனால் முதல்வர் பயப்படுகிறார். மேலும் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க பாஜகவுக்கு துணிவிருந்தால், தாங்கள் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள்.

 

அவர் வேற, நான் வேற. எங்களுக்களுடையபந்தம் அண்ணன், தம்பி மட்டும் தான் என பேசினார். தொடர்ந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்த கோரி கண்டன பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon