ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை..!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மற்றொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக பள்ளி செல்லாமல் இருந்த அவரிடம் அதற்கான காரணம் குறித்து பெற்றோர் கேட்டபோது தனது அறைக்கு சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.






