தென்காசி நூலகத்தில் இந்த பதிப்பகங்களின் 2,200 புத்தகங்கள் அகற்றம்!
தமிழ்நாடு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடிகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலி புத்தகங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்திய இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் இடம்பெற்றிருந்த ‘அகல் விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களின் 2,200 சந்தேகத்திற்குரிய புத்தகங்களை நூலகத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க ஆட்சியில், கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகம் கட்டப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இப்படி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பெரியார் அறிவுலகத்தின் சிறப்புகளுக்கு உரிமை கோரிய நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு கொள்முதல் வைக்கப்பட்டுள்ள போலி புத்தகங்கள் குறித்து முறைகேடு பற்றி எழுதிய கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் முருகன் அந்தக் கட்டுரையில், அகல்விளக்கு என்ற பதிப்பகத்தின் பெயரில் பல போலி எழுத்தாளர்களின் பெயர்களில் பல புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ளது, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிகளில் ஊழல் நடந்துள்ளது என்றும் அம்பலப்படுத்தினார்.
மேலும், அந்த புத்தகங்களை எழுதியவர்களின் பெயர்கள் விஜய் திரிஷா, திரிஷா விஜய், அஞ்சலி சூர்யா, சூர்யா அனுஷ்கா ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், ஆங்கிலத்தில் ஃபீனிக்ஸ் என்ற பதிப்பகத்திடம் இருந்தும் இதே போல போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் எழுதியிருந்தார்.
பெரியார் அறிவுலகத்தில் இப்படி போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். போலிப் புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய தி.மு.க அரசைக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள போலி புத்தகங்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். இதையடுத்து, பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் போலி புத்தகங்கள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில், பெரியார் அறிவுலகத்தில் மட்டுமல்லாமல் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் இதுபோன்ற போலி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன என்ற புகார் எழுந்தது. மேலும், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் மற்றும் பாரதியாரின் பெயர்களில் போலி புத்தகம் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரியார் அறிவுலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகங்களில் மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் பல பொது நூலகங்களில் இதுபோன்ற போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இந்த போலி புத்தகங்கள் வாசகர்களுக்கு தவறான தகவல்களைத் தருவதால் இவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பொது நூலகங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள போலி புத்தகங்களை நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பொது நூலகத்துறை அதிகாரிகள் போலி புத்தகங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் கொள்முதல் செய்யப்பட்ட ‘அகல் விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களின் 2,200 புத்தகங்களை அகற்றி நூலகத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனுஷா தனுஷ், சூர்யா அனுஷ்கா, அஞ்சலி சூர்யா போன்ற பெயர்களில் வெளியான அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் இடம்பெற்றிருந்த நூல்கள் அனைத்தும் வாசகர்கள் பயன்படுத்த முடியாதவாறு நூலக அலமாரிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய புத்தகங்களைப் பட்டியலிட்டு அவற்றை வாசகர்களுக்குக் கிடைக்காதவாறு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





