பொங்கல் பரிசு – தீபாவளிக்கு சிறப்பு தொகுப்பு
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதை அடுத்து ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலமாக மளிகை பொருட்கள், வெல்லம், அரிசி உட்பட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு திமுக, அதிமுக இல்லாமல் புதிதாக தவெக அரசு பொறுப்பேற்று இருப்பதால் பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு இலவச மளிகை தொகுப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளடக்கிய ரூ.700 மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு அதற்காக நிதித்துறையிடம் சில விவரங்களை கேட்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சினையாக வெடித்துள்ளது.
தொடர்ந்து அரிசி, பருப்பு, மளிகை பொருட்களின் விலை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நெருக்கடியை சமாளிக்க, தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுவருவதாகவும் அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்கிற விவரங்களை நிதித்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




