--- --:--:-- --

ஞானபீடத்தை விட பெரிய விருதை நாங்கள் அறிவிக்கிறோம்..!

9

ந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1975-ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.

 

இந்நிலையில். கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக குரல்கள் வலுத்து வருகிறது. ‘வைரமுத்துவுக்கு ஞானபீடம் என்பது தமிழுக்கு ஏற்பட்ட அவமானமல்ல. அதன் இந்திய அளவிலான இதுவரை பரிசு பட்டியலைப் பாருங்கள் இது இந்திய அவமானம்’ என்று எழுத்தாளர் பவா செல்லதுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். இது தொடர்பாக தனது பேஸ் புக் தள பதிவில், “இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார்.

 

அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும். இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

 

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. “தமிழில் நவீன இலக்கியம் உண்டா?” என்று என்னிடம் பல மற்றமொழிக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள்.

 

அகிலனில் இருந்து தொடங்கி இந்திய மொழி அறிஞர்கள் நம் நவீன இலக்கியம் பற்றிய ஆழ்ந்த முன்முடிவுக்குள் சென்றுவிட்டனர். நம் நவீன இலக்கியத்தை உலகம் அறிந்தால்தான் இந்தியாவில் மதிப்பு என முடிவுசெய்தோம். இன்று அதை கொண்டுசெல்ல வாழும்தமிழ் இலக்கிய மாநாடு வழியாக பெருமுயற்சி எடுக்கிறோம். இன்று எந்த சர்வதேச இலக்கிய இதழ் ஓர் இந்திய இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டாலும் அதில் நம் படைப்பு உள்ளது. இந்தியா அதை திகைப்புடன் பார்க்கிறது.

 

அந்த முயற்சிகள் அனைத்தையும் சீரழிப்பது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஞானபீடப் பரிசு. தமிழிலக்கியத்தை நோக்கிக் காறித்துப்பியிருக்கிறார்கள். இதற்குமேல் உனக்கு மதிப்பில்லை என்கிறார்கள். இந்த அளவே உன்னை அளவிடுவோம் என குனிந்து நோக்கிச் சொல்கிறார்கள். அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். கேந்திர சாகித்ய அக்காதமி அரங்கில் வைரமுத்து அரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார், தாகூரை விட அதிகம் என அசோக் வாஜ்பாய் என்பவர் சொல்ல அரங்கே சிரித்தது. அந்தச் சிரிப்பின் பொருள் தெரிந்து நான் கூசிச் சிறுத்து அமர்ந்திருந்தேன்.

 

அந்த சிரிப்பு, அந்த இளக்காரம், அந்த போலிப்பெருந்தன்மை கொண்ட தட்டிக்கொடுத்தல், வேண்டுமென்றே நம்மில் சிறியவர்களை அங்கீகரித்து பிறரை அவரைவிடக் கீழ் என நிறுவும் சூழ்ச்சி– இது நூறாண்டுகளாக தமிழுக்கு எதிராக நிகழ்கிறது. இப்போதும் நிகழ்ந்துள்ளது. இவர்கள் யார் நம்மை மதிக்க? இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்? இத்தனை சூழ்ச்சிகள் செய்து இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம்? எண்ணக் கூசுகிறது. இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர்.

 

“ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை. இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)
இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon