--- --:--:-- --

விஜய் மேடைக்காக காமெடி செய்கிறார், அ.தி.மு.க-வுடன் போட்டி என சொல்லுங்கள் பார்க்கலாம் – கடம்பூர் ராஜு

5

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, வேலூரில் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி இடையில் இருப்பவர்கள் சும்மா காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், விஜய் தான் காமெடி பண்ணுகிறார்.

 

விஜயின் தமிழக வெற்றி கழகம் எத்தனை தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. நகர மன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என ஒரு தேர்தலையும் சந்திக்காத கட்சி. ஆனால், எம்.ஜி.ஆரின் வரலாறு எல்லாம் தம்பி விஜய்க்கு தெரியாது. அ.தி.மு.க-வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து ஆறாவது மாதமே துணிச்சலாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சந்தித்தது.

 

இந்தியாவின் இரும்பு பெண்மணி பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் இந்திரா காங்கிரஸ் போட்டியிட்டது. பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிட்டது. தி.மு.க அசுர பலத்தோடு 150 சட்டமன்ற உறுப்பினர்களோடு கருணாநிதி தலைமையில் ஆட்சியில் இருந்தது.இத்தனையும் எதிர்த்து ஆறு மாத குழந்தையாக இருந்த போது அதிமுக களத்தில் சென்று வென்று தனது பலத்தை நிரூபித்த கட்சி.

 

இந்த வரலாறு எல்லாம் விஜய்க்கு தெரியாது. விஜய் கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அவர் கட்சி ஆரம்பித்த பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. போட்டி என்று சொல்கிறார். யாருக்காவது போட்டி என்று சொல்லிவிட்டு போகட்டும். எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு போட்டி யாரும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் தேர்தல் களத்தில் எங்களுக்கு யாருமே போட்டி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவேதான் அவர்கள் நான் போட்டி நீ போட்டி என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

விஜய் அதிமுகவுடன் தான் போட்டி என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஏனென்றால், அ.தி.மு.க-வின் சுயபலம் சுயரூபம் என்ன என்று அவருக்கு தெரியும். அவர் மேடைக்காக காமெடி பண்ணுகிறார். அவர் காமெடி பண்ணுவதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.” என்று கடம்பூர் ராஜு கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon