சோகத்தில் முடிந்த த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தோன்றும் நிகழ்வு என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், எதிர்பாராத விதமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில் இன்று பகல் 12 மணி முதல் 3 மணி வரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறை 51 கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது.
4,998 பேருக்கு மட்டுமே கியூ.ஆர். குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. 15 மருத்துவக் குழுக்கள், 6 மருத்துவ முகாம்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 25 சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்த மைதானமும் கண்காணிக்கப்பட்டது.
விஜய் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்தார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (37) என்று அடையாளம் காணப்பட்ட அவர், சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளிப்பட்டறைத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்குத் தொடக்கக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுராஜ் இந்தக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராகப் பங்கேற்க வந்தாரா அல்லது மைதான ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளியா என்பது குறித்து மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது சேலம் கூட்டத்திலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




