--- --:--:-- --

விஜயநகரப் பேரரசு காலத்து சிலைகள் மீட்பு..!

10

விஜயநகர பேரரசு காலத்து உலோகச் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கும்பலைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் சினிமா பாணியில் காரைத் துரத்திப் பிடித்த தனிப்படையினர், சுமார் 112 கிலோ எடை கொண்ட சுதர்சனர் மற்றும் தேவி சிலைகளை மீட்டனர். கைதான 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு இந்தச் சிலைகளை விற்கத் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

 

தமிழ்நாட்டின் தொன்மையான கோவில்களில் ஒன்றிலிருந்து திருடப்பட்ட சுமார் 14-15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்து உலோகச் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற கும்பலைச் சேர்ந்த நான்கு பேரைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இரவு, சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வலையபேட்டை அருகே தனிப்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த காரைச் சோதனை செய்தனர். அப்போது சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 செ.மீ உயரமுள்ள சுதர்சனர் (எ) விஷ்ணு சிலை மற்றும் 73 செ.மீ உயரமுள்ள தேவி சிலை ஆகிய இரண்டு தொன்மையான சிலைகளைக் கண்டறிந்து மீட்டனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

விசாரணையில், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்தி பெரும் விலைக்கு விற்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திருட்டில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும், இவை எந்தக் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறியவும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிகரமாகச் செயல்பட்ட தனிப்படையினரைச் சிலை திருட்டு தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்ததாவது; சிலை தடுப்புப் பிரிவு தனிப்படையைச்சேர்ந்த காவலர்கள் கடந்த 06-ம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இவர்களை கடந்து சென்ற ஒரு மாருதி கார் வேகமாக சென்றது. அவற்றை சந்தேகத்தின்பேரில் விரட்டிப்பிடித்து சோதனை செய்தபோது, சுமார் 77.300 கிலோ எடை கொண்ட சுதர்சனர் (விஷ்ணு) மற்றும் 35.450 கிலோ எடை கொண்ட தேவி உலோகச் சிலைகள் வாகனத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இவை 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இதனையடுத்து சிலைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி சுசுகி எர்டிக்கா கார் (TN 43 Q 5896) பறிமுதல் செய்யப்பட்டது.

 

முறையான ஆவணங்களின்றித் திருடப்பட்ட சிலைகளை மறைத்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி பெரும் லாபம் ஈட்ட முயன்ற மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில குற்றவாளிகளைத் தேடும் பணி தொடர்கிறது என்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon