--- --:--:-- --

சத்ரியனாக வாழ்ந்தது போதும்.. இனி சாணக்கியனாக மாறுவோம் – பிரேமலதா விஜயகாந்த்

10

தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டேன். ஆனால், பிற கட்சிகள் அறிவிக்கும் முன்பே நாம் அவசரப்படத் தேவையில்லை என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம், பாசாரில் வெள்ளிக்கிழமை (ஜன.9) நடைபெற்ற தே.மு.தி.க-வின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’-வில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அரசியல் களத்தில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசினார்.

 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இந்த மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதனை ரகசியமாக வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: “யாருடன் கூட்டணி என்ற முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன். ஆனால், ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட கட்சியோ இதுவரை கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படி இருக்கும்போது நாம் மட்டும் ஏன் ‘முந்திரிக்கொட்டை’ போல முந்த வேண்டும்? இவ்வளவு காலம் நாம் சத்ரியனாக (நேர்மையாக) வாழ்ந்துவிட்டோம்; இனிமேல் அரசியலில் சாணக்கியனாகச் செயல்பட வேண்டும்.” என்று பேசினார்.

 

 

தே.மு.தி.க-வின் பலம் குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் தே.மு.தி.க-வுக்கு இணையான கட்சி வேறொன்றும் இல்லை. தே.மு.தி.க இல்லாமல் எந்தக் கட்சியும் இனி ஆட்சி அமைக்க முடியாது. தொண்டர்களின் எண்ணப்படியே கூட்டணி அமைக்கப்படும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற்கு ஏற்ப விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

 

“கடலூர் மாவட்டம் என்றாலே அது கேப்டன் விஜயகாந்தின் கோட்டை. அவர் நம்மை விட்டுப் பிரியவில்லை; தொண்டர்களாகிய உங்களிடத்தில் நான் கேப்டனைப் பார்க்கிறேன். அவர் தலைமைக்கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார், புதைக்கப்படவில்லை. இந்த மாநாட்டைக் கலைக்க நினைத்தவர்கள், இங்கு கூடியுள்ள அன்புக் கூட்டத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

 

தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க ‘பேரம்’ பேசுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த பிரேமலதா, “ஆம், நான் பேசுகிறேன்; எனது கட்சித் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூட்டணி குறித்துப் பேசுகிறேன்,” என்று விளக்கமளித்தார்.

 

மாநாட்டின் இறுதியில், தொண்டர்களை மதிக்கும் கண்ணியமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும், அதுவரை தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தே.மு.தி.க மாநாட்டில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மறைந்த தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

 

அதே போல, விஜயகாந்த்துக்கு அரசு இடத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில், பிரேமலதா விஜயகாந்துக்குத் தொண்டர்கள் சார்பில் ‘வீரவாள்’ பரிசளிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon